ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாட மீண்டும் டி20 அணிக்குள் இடம் பிடிப்பார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.
இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 3ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்த இரு தொடர்களுக்கான தனித்தனி அணியை 27ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. டி20 அணியில் மூத்த வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இளம் வீரர்களான சுப்மன் கில், சிவம் மாவி உள்ளிட்டோருக்கு டி20 அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டிருக்கிறார். இது தற்காலிக ஓய்வா? அல்லது சரியாக செயல்படாததன் எதிரொலியா? என்பது பற்றி தற்போது வரை எதுவும் தெரியவில்லை.
2022ல் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் சராசரி 21.41 மட்டுமே. 364 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10 இன்னிங்ஸ் விளையாடி 336 ரன்கள் அடித்து, 37.33 சராசரி வைத்துள்ளார். இவரது செயல்பாடு லிமிட்டட் ஓவர் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்க்கு இல்லை என்பதால், இலங்கை தொடரில் நீக்கப்பட்டிருக்கிறார் என்கிற பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் வருகிற 2023 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ரிஷப் பண்ட் மீண்டும் டி20 அணியில் இடம்பெறுவார் என்று ஆணித்தனமான கருத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். அவர் பேசியதாவது:
“வருகிற 2023 ஐபிஎல் சீசன் ரிஷப் பண்ட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதில் நன்றாக செயல்பட்டால் மட்டுமே டி20 போட்டிகளில் மீண்டும் இடம்பிடிக்க முடியும். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வாய்ப்புகள் கிடைக்கும் இல்லையெனில் 2023ல் வரும் 50 ஓவர் உலககோப்பையில் விளையாட முடியாமல் போகலாம்.
விராட் கோலிக்கும் இதே நிலை தான். ஐபிஎல் போட்டிகள் நன்றாக செயல்பட்டால் மீண்டும் டி20 அணியில் அவரால் இடம்பிடிக்க முடியும். விராட் கோலி போன்ற வீரர் டி20 போட்டிகளுக்கும் தேவை. இன்னும் அவரிடம் சிறந்த ஆட்டம் இருக்கிறது.” என்றார்.