சுயநலமாக தனிப்பட்ட பேட்டிங் பற்றி மட்டுமே யோசிக்காமல் அணியை பற்றியும் யோசிக்க வேண்டும் என்று பாபர் அசாமிற்கு கௌதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சற்று மோசமான நிலையில் இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, மூன்றாவது போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக தடுமாறி வெற்றியை பெற்றது.
அணியின் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. இந்திய அணிக்கு எதிராக, முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 9 பந்துகள் பிடித்து நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக தனது பேட்டிங்கை பழைய பார்மிற்கு கொண்டுவர வாய்ப்பு கிடைத்திருந்தும், அதை பயன்படுத்திக் கொள்ளாமல் 5 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து அவசரப்பட்டு ரன் அவுட் ஆகினார்.
அணியில் மற்றொரு துவக்க வீரர் ஃபக்கர் சமான் காயத்தில் இருந்து மீண்டு வந்து, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வதாக விளையாடினார். அவர் 16 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
வழக்கமாக பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் தான் களமிறங்குவார். பக்கர் சமான் காயத்தினால் வெளியே இருந்ததால், பாபர் துவக்க வீரராக களம் இறங்கினார். இது பாகிஸ்தான் அணிக்கு பல போட்டிகளில் நன்றாக அமைந்தது.
ஆகையால் பக்கர் ஜமான் மீண்டும் அணிக்கு திரும்பியும் தொடர்ந்து துவக்க வீரராகவே பாபர் அசாம் இறங்கி வருகிறார். இதனை விமர்சித்து, கேப்டன் பொறுப்பில் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரையும் கூறியுள்ளார் கௌதம் கம்பீர். அவர் கூறுகையில்,
“பாபர் அசாம் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவர் சுயநலமாக இல்லாமல் அணியின் வெற்றிக்கும் கவனம் செலுத்த வேண்டும். தனது திட்டத்தில் எதுவும் சரியாக அமையவில்லை என்றால் உடனடியாக அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அந்த வகையில் துவக்க வீரர் ஃபக்கர் சமானை மீண்டும் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும். அவரை எதற்காக தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களம் இறக்கி அவரது பேட்டிங்கை வீணடிக்கிறீர்கள். பாபர் அசாம் கேப்டன் என்பதால் அவர் தனக்கு தேவையான முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அணியை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
ரிஸ்வான்-பாபர் ஜோடி துவக்கத்தில் களமிறங்கி நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். இல்லை என்று கூறவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் அது சரியாக செல்லவில்லை என்பதால் இந்த விமர்சனம் வந்திருக்கிறது. ஆகையால் இதனை பாபர் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.