இவர மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் இனிமே தான் போறக்கணும்.. தரமான வீரர் – தினேஷ் கார்த்திக் புகழாரம்!

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் தரமான ஆல்ரவுண்டர். எந்த சூழலிலும் அவரை நம்பலாம் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக மூன்றுவித போட்டிகளிலும் விளையாடி தனது முக்கியத்துவத்தை நிரூபித்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இடம்பெற்று நல்ல பங்களிப்பு கொடுத்தார்.

இதற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தி இருக்கிறார். இவை அனைத்திற்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளில் தன்னை பல ஆண்டு காலமாக நிரூபித்து வருகிறார்.

442 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், சர்வதேச அளவில் முதல் 10 இடங்களுக்குள்ளும் இருந்து வருகிறார். மேலும் பேட்டிங்கில் கிட்டத்தட்ட 3000 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 5 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.

சமீபத்தில் நடந்த வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 58 ரன்கள் அடித்தார். இதில் சிறப்பு என்னவென்றால், அவர் எட்டாவது வீரராக களம் இறங்கினார். 300 ரன்களுக்குள் இந்திய அணி சுருண்டிருக்கும் என எதிர்பார்த்த போது, 400 ரன்கள் கடப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் அஸ்வின்.

அஸ்வின் மிகவும் தரமான ஆல்ரவுண்டர் எந்த சூழலிலும் அவரை நம்பலாம் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். மேலும் அவருடன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் பேசியதாவது: “அஸ்வினின் பந்துவீச்சை பற்றி பேசவே தேவையில்லை. ஆனால் அவரது பேட்டிங் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் வைத்திருக்கிறார். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் அடித்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் இறங்கக் கூடியவர். துவக்க வீரராகவும் களமிறங்கி தமிழக அணிக்கு அசத்தியிருக்கிறார்.

எட்டாவது வீரர் பேட்டிங் வரும் பொழுது, எதிரணிக்கு எளிதாகிவிடும். விரைவாக விக்கெட் எடுத்து விடலாம் என நினைப்பர். அப்படிப்பட்ட சூழலில் அஸ்வின் போன்ற வீரர் களமிறங்கி நீண்ட நேரம் மைதானத்தில் இருந்தால் எதிரணிக்கு நம்பிக்கை உடைந்து விடும். இப்படி பல போட்டிகளில் அஸ்வின் செய்து இருக்கிறார். 8வது இடத்தில் இறங்கி ஐந்து சதங்கள் அடிப்பது எளிதல்ல.” என்றார் தினேஷ் கார்த்திக்.

மேலும் தமிழக அணியில் விளையாடும்பொழுது நடந்த அஸ்வின் செய்த சம்பவத்தை பகிர்ந்த தினேஷ் கார்த்திக், “தமிழக அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, தரம்சாலா மைதானத்தில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 60 ரன்களுக்குள் 5 போனது. அப்போது உள்ளே வந்தார் அஸ்வின். நிதானமாக விளையாடி அந்த சூழலிலும் சதம் அடித்தார்.  அப்போது நான் புரிந்து கொண்டேன். இவரை வெறுமனே பவுலர் என்று மட்டுமே கூறி விட முடியாது. பேட்டிங்கிலும் பேட்ஸ்மேனனுக்கு நிகராக நிலைத்து விளையாடி அணியை நல்ல நிலைக்கு எடுத்து செல்கிறார் என்று. அதை இப்போது உலகமே தெரிந்துகொண்டது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.