ரிஷப் பண்ட் எங்களுடைய டி20 பிளானில் இருக்கிறார் என பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
கடந்த டிசம்பர் 30ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது.
ரிஷப் பண்ட்டை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு வெட்டு காயங்கள் தலைப்பகுதியில் இருப்பதாகவும், கணுக்கால் மற்றும் காலில் உள்ள மூட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் காலில் உள்ள ஜவ்வு பகுதியும் கிழிந்து இருப்பதால் அதற்கும் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட உள்ளார் என்கிற தகவல்களும் இன்று பிசிசிஐ மருத்துவக்குழு இயக்குனரால் தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையில் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் எடுக்கப்படவில்லை. அவர் இந்திய தேசிய அகடமிக்கு செல்வதாக இருந்தது. அதற்குள் இப்படி விபத்து நேர்ந்துவிட்டது.
விபத்து நேர்வதற்கு முன்னர், ரிஷப் பண்ட் இனி லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருப்பது கடினம். அவரது செயல்பாடு மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.
இந்நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் குணமடைந்து வந்தால் இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்படுமா? பிளானில் இருக்கிறாரா? என்பதற்கு பதில் அளித்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
“ரிஷப் பண்ட்-டிற்கு இப்படி நடந்திருப்பது துரதிஷ்டவசம். தனிப்பட்ட முறையில் எனது அன்பு மற்றும் பிரார்த்தனை முழுவதும் அவரை நோக்கியே இருந்தது. விபத்து நேர்ந்த தகவலை கேட்ட பிறகு எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதன் பிறகு அணியின் கேப்டனாக இருப்பதால் ஒட்டுமொத்த அணி சார்பிலும் அவருக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை கூறிக் கொள்கிறேன்.
எங்களது டி20 பிளானில் ரிஷப் பண்ட் கட்டாயம் இருக்கிறார். மற்றவீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளே வந்து செயல்பட்டாலும், ரிஷப்மென்ட் ஏற்படுத்தும் மாற்றத்தை இவர்கள் கொடுப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஆனாலும் அவருக்கு நடந்த இந்த விபத்தினால் சிறிது காலம் ஆட முடியாது என தெரியவந்துள்ளது. பொறுத்திருந்துதான் காண வேண்டும் வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்று. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.” என்றார்.