அப்செட் இல்ல அதிர்ச்சி…. யாராலும் முடியாததை செய்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த ஜிம்பாப்வே
இந்திய அணியுடனான முதல் டி.20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் 29* ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகளையும், வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக இலகுவான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில்லை (31) தவிர மற்றவர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்கை ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர்.
பந்துவீச்சாளரான ஆவேஸ் கான் 16 ரன்களும், கடைசி நேரத்தில் தனியாக போராடிய வாசிங்டன் சுந்தர் 27 ரன்களும் எடுத்தாலும், ஜிம்பாப்வே வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 102 ரன்களில் ஆல் அவுட் செய்து, இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது, குறிப்பாக சர்வதேச டி.20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக மிக குறைந்த இலக்கையும் கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை ஜிம்பாப்வே அணி பெற்றுள்ளது.