ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் அசத்தல் பேட்டிங்… கடைசி நேரத்தில் அயர்லாந்தை கதறவிட்ட ரிங்கு சிங், சிவம் துபே; 180 ரன்கள் குவித்தது இந்திய அணி
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள பும்ராஹ் தலைமையிலான இளம் இந்திய அணி, அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அயர்லாந்தின் டப்லின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய திலக் வர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் கூட்டணி சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் – சஞ்சு சாம்சன் ஜோடி மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். ருத்துராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த சிவம் துபே – ரிங்கு சிங் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடினாலும், கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 185 ரன்கள் குவித்துள்ளது. ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்களும், சிவம் துபே 16 பந்துகளில் 22* ரன்களும் எடுத்தனர்.