இந்திய அணியில் இவர் ஒருவரை தவிர மீதியிருக்கும் 10 பேரும் ஆங்காங்கே சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள் என இளம் வீரரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் வாசிம் ஜாபர்.
நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், கடைசி டி20 போட்டியை இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. மீதம் நடந்த இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு சவாலாகவே இருந்தது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் மிக மோசமான துவக்கத்தை கொடுத்தனர். கில், 7 ரன்கள் மற்றும் 11 ரன்கள் முறையே அடித்திருந்தார். இஷான் கிஷன் 5 மற்றும் 19 ரன்கள் முறையே அடித்திருந்தார்.
இருவர் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும், ஷுப்மன் கில் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. டி20 போட்டிகள் அவருக்கு ஏற்றது அல்ல என்றே சிலர் கூறிவிட்டனர்.
மூன்றாவது டி20 போட்டியில் 63 பந்துகளில் 126 ரன்கள் விளாசி பல்வேறு சாதனைகளை படைத்தார். ஆகையால் இவர் மீதிருந்த விமர்சனங்கள் அனைத்தும் தற்போது பாராட்டுகளாக மாற்றியுள்ளது.
கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் இஷான் கிஷன் மீது திரும்பியுள்ளது. ஏனெனில் 234 ரன்கள் அடித்த போட்டியில், ஒபனிங் வீரர் வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டம் இழந்தது அணிக்கு மோசமான துவக்கத்தை கொடுத்திருக்கிறது.
இஷான் கிஷன் 14 டி20 போட்டிகளாக பெரிதளவில் சோபிக்கவில்லை. மொத்தம் 200 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். இவரது சராசரி வெறும் 15 ஆகும். 24 வயதாகும் இஷான் கிஷன் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்டு வருகிறார். அதிரடியாக விளையாடக்கூடிய இவர், இப்படி தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சொதப்பி வருவது அவரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்நிலையில், இஷான் கிஷனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. அதை சரிசெய்தால் மிகச் சிறந்த வீரராக வளரலாம் என அறிவுறுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஓபனர் வாசிம் ஜாஃபர். அவர் பேசியதாவது:
“இஷான் கிஷன் ஸ்பின்னர்கள் எதிர்கொள்வதற்கு திணறி வருகிறார். ஒரே மாதிரியாக அவுட் ஆகிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்தார். அணியில் இருக்கும் மீதமுள்ள 10 வீரர்களும், ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இவர் மட்டுமே தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு விரைவாக பயிற்சிகள் செய்து, சரி செய்துகொள்ள வேண்டும். சர்வதேச போட்டிகளில் இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது பாதகமாக முடிந்து விடும்.” என்றார்.