சஞ்சு சாம்சனுக்கு நான் போட்டியும் இல்லை, எனக்கு அவர் போட்டியும் இல்லை என பேசியுள்ளார் இஷான் கிஷன்.
இந்திய அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இளம் வீரர்கள் கிடைக்கும் ஓரிரு வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் தொடர்களில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக செயல்பட்டார். சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் கலக்குகிறார். ஓபனிங் இடத்திற்கு முன்னணி போட்டியாளராக இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் பற்றி கூறவே வேண்டாம். அதீத அனுபவத்தை ஐபிஎல் போட்டிகளில் மூலம் பெற்றிருக்கிறார். ஆனால் பிசிசிஐ அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற விவாதம் ஒவ்வொரு தொடர்களின்போதும் வருகிறது.
இதற்கிடையில் இளம்வீரர் இஷான் கிஷன் கிடைத்த ஒரு வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இரட்டை சதம் அடித்து பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்திருக்கிறார். அவரையும் ஒதுக்க முடியாது.
குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஒரு இடத்திற்காக ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் கடுமையாக போட்டியிடுகின்றனர். இந்த போட்டி குறித்து அண்மையில் பேட்டி அளித்த இஷான் கிஷன்-இடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிறப்பாக பதில் அளித்திருக்கிறார். அவர் பேசியதாவது:
நீங்கள் நினைப்பதை போல நாங்கள் இதை ஒரு போட்டியாக கருதவில்லை. ஒருவரிடம் இன்னொருவர் கற்றுக் கொள்கிறோம். அவர் சதம் அடிக்கிறார், நான் சதம் அடிக்கிறேன் என நாங்கள் பார்ப்பதில்லை. இறுதியில் மூவரும் நாட்டிற்காக விளையாடுகிறோம். இந்தியா வெற்றி பெற்றால் அனைவர்க்கும் மகிழ்ச்சி தான். தேவையான அறிவுரைகளை பகிர்ந்துகொள்கிறோம்.
அவர் ரன்கள் அடித்தாரா? இல்லையா? இல்லையா என்பதை பார்ப்பதில்லை. அவரவர் தனிப்பட்ட ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ஏதேனும் தவறு இருந்தால் அதை சரி செய்வது கொள்வதற்கு ஆலோசனைகளையும் செய்கிறோம். சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் இருவருக்கும் நான் போட்டி அல்ல. எனக்கும் அவர்கள் போட்டி அல்ல.” என்றார்.