மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்? என்று ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றியைப் பெற்றிருந்தாலும், துவக்க வீரர் கேஎல் ராகுல் ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் கேஎல் ராகுல் சொதப்பிய போதும், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கேஎல் ராகுல் வசம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.
கேஎல் ராகுல், மூன்று இன்னிங்ஸ்களில் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். 3வது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தூர் மைதானம் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். ஒருவேளை இந்தூர் டெஸ்டில் கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால், கம்பேக் கொடுப்பதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும்.
ஆனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இருக்கமாட்டார். ஷுப்மன் கில் ஓபனிங் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று கணித்துள்ளார் முன்னாள் இந்திய துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறியதாவது:
இந்திய அணிக்குள் நடப்பதை வைத்துப்பார்த்தால், கே எல் ராகுலை விட்டு நகர்ந்து, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்கள் போன்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் ஓவல் மைதானம் இருக்காது. கண்டிஷன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
புள்ளி விவரங்களை வைத்துப்பார்த்தால், இங்கிலாந்து மைதானங்களின் கண்டிஷன்களில் கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இறுதிப்போட்டியில் கேஎல் ராகுல்-க்கு தான் ஓபனிங் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை கருத்தில்கொண்டு கேஎல் ராகுல்-க்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் இப்போது அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்.
கேஎல் ராகுல், அதற்கு கைமாறாக ரன்கள் அடிக்க வேண்டும். அவர் அதை செய்யத் தவறிவிட்டார். வேறு வழியின்றி கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் ஓபனிங் செய்வார் என்று உறுதியாக தெரிகிறது.” என்று பேசினார்.