சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் ஆடவைத்ததே தவறான முடிவு.. இரண்டாவது போட்டியிலுமா? – முன்னாள் வீரர் பேட்டி!

சஞ்சு சாம்சன், ஏன் இரண்டாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் எடுக்கப்படவில்லை என்று முன்னாள் வீரர்கள் ஆஷிஷ் நெக்ரா, முரளி கார்த்திக் போன்றோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நியூசிலாந்து சென்று டி20 தொடரை முடித்துவிட்டு தற்போது ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடி 306 ரன்கள் எடுத்த போதும், நியூசிலாந்து அணி அதனை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால் பெருத்த சிக்கலாக அமைந்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு பந்துவீச்சு பேட்ஸ்மேன் (தீபக் சஹர்) மற்றும் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் (தீபக் ஹூடா) இருவரையும் எடுத்து வந்திருக்கின்றனர். சிக்கல் இதுவல்ல.

முதல் ஒருநாள் போட்டியில் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்து, முக்கியமான கட்டத்தில் ஷ்ரேயாஸ் உடன் சேர்ந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதுதான் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

டி20 தொடரிலும் அவர் இருந்தார். ஆனால் ஒரு போட்டியிலும் விளையாட வைக்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வைக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சன் க்கு தொடர்ந்து இது போன்ற அவலங்கள் நடப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நேக்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். “முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா விளையாட வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவர் நன்றாக பேட்டிங் விளையாடுவார். அதேநேரம் டி20 போட்டிகளில் சிறப்பாக பவுலிங் வீசினார். ஒரு நாள் போட்டிகளிலும் அதை தொடர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் ஆறாவது பந்துவீச்சு வாய்ப்பாகவும் இருந்திருப்பார்.

ஆனால் சஞ்சு சாம்சன் விளையாட வைக்கப்பட்டார். அதில் தவறில்லை. ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அடுத்த போட்டியில் உடனடியாக வெளியேற்றினால் அது மனதளவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அணியின் கேப்டன் புரிந்து கொள்ளாமல் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார்.

தாக்கூர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சரிவர செயல்படவில்லை. ஆகையால் அவரை வெளியில் வைத்தது சரிதான். ஆனாலும் ஒரு போட்டியிலேயே உடனடியாக வெளியேற்றுவது முற்றிலும் தவறு. இன்னும் சில போட்டிகள் வாய்ப்பு கொடுத்து சரி வரவில்லை என்றால் வெளியில் அமர்த்துவது நல்ல முடிவாக இருந்திருக்கும். சஞ்சு சம்சனுக்கு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.