கோஹ்லி, ரஹானே பொறுப்பான ஆட்டம்… 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 120 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 269 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 20 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான தவான் கோஹ்லியின் அவசரத்தால், 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி கடுப்புடன் வெளியேறினர்.
இதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி – துணை கேப்டன் ரஹானே ஜோடி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை நிதானமாக ரன் சேர்த்தது.
சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்து ரன் சேர்த்த இந்த ஜோடி இந்திய அணியை இலகுவாக வெற்றியின் அருகில் கொண்டு வந்த போது, ரஹானே 79 ரன்களில் விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ராஹானே விக்கெட்டை இழந்த சிறிது நேரத்தில் கோஹ்லியும் 112 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 3 ரன்களும், தோனி 4 ரன்களும் எடுத்தன் மூலம் 45.3 ஓவரில் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.