TNPL 2017 : கோவை அணி திருவள்ளூர் அணியை வெற்றி பெற்றது 1

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சும், கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்தின. வலதுகை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் இலங்கை தொடரில் இருந்து விலகிய முரளிவிஜய், இந்த சீசனில் முதல் முறையாக கோவை அணிக்காக நேற்று களம் இறங்கினார். ‘டாஸ்’ ஜெயித்த கோவை கேப்டன் முரளிவிஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய திருவள்ளூர் அணிக்கு சித்தார்த் (18 ரன்), சதுர்வேத் (24 ரன்), ஹரி நிஷாந்த் (27 ரன்) பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அதன் பிறகு கைகோர்த்த கேப்டன் பாபா அபராஜித்தும், அபிஷேக் தன்வாரும் கோவை பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய இவர்கள், ரன்மழை பொழிந்தனர். இதன் பலனாக திருவள்ளூர் அணி 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தியது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாபா அபராஜித் 60 ரன்களும் (31 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் தன்வார் ஆட்டம் இழக்காமல் 55 ரன்களும் (22 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.

மெகா இலக்கை கண்டு கோவை அணி சளைத்து விடவில்லை. சூர்யபிரகாஷ் (5 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும், கேப்டன் முரளிவிஜயும், அனிருத் சீத்தா ராமும் சிக்சர் வேட்டை நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினர். விஜய் 69 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

TNPL 2017 : கோவை அணி திருவள்ளூர் அணியை வெற்றி பெற்றது 2

இதன் பின்னர் சீத்தாராம்- அக்‌ஷய் சீனிவாசன் ஜோடி அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தது. பரபரப்பான கடைசி ஓவரில் கோவை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் வீசினார்.

முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன. 3-வது பந்தில் சீனிவாசன் (38 ரன்) கேட்ச் ஆனார். 4-வது பந்தில் 2 ரன்னும், 5-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் கோவை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவையாக இருந்தது.

இதையடுத்து ‘பிரிஹிட்’டாக வீசியப்பட்ட கடைசி பந்தில் கோவை அணியினர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்து வெற்றிக்குரிய 2 ரன்களை எடுத்தனர். கோவை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் விரட்டிப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் (சேசிங்) இது தான். அனிருத் சீத்தாராம் 69 ரன்களுடன் (43 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.

TNPL 2017 : கோவை அணி திருவள்ளூர் அணியை வெற்றி பெற்றது 3

கோவை அணி 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவில்லை என்று 6 புள்ளியுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. நாளைய கடைசி லீக்கில் கோவை அணி திருச்சியை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறி விடும்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *