கதை என்ன?
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான ஆடம் கில்கிறிஸ்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
விவரங்கள்:
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணி ரகானே, டோணி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் 251 ரன்களை குவித்தது. 72 ரன்கள் எடுத்து ரகானே ஆட்டமிழந்தார். 112 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் உதவியுடன் இந்த ரன்களை அவர் குவித்தார்.
ரஹானே பெவிலியன் சென்றதற்கு பின் ஜாதவுடன் ஜோடி சேர்ந்த தோனி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 40வது முடிந்த பிறகு இருவரும் அதிரடியை காட்டினர். 230 கூட இந்தியா அடிக்காது என்ற நினைத்த போது, இந்த ஜோடி கடைசி 10 ஓவரில் 100 ரன் அடித்து 50 ஓவர் முடிவில் 251 ரன் சேர்த்தது.
இந்த போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய அணியின் அதிரடி நட்சத்திர வீரர் தோனி 79 பந்துகளில் 78 ரன் சேர்த்தார்.
அடுத்தது என்ன?
இந்த போட்டியின் போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான ஆடம் கில்கிறிஸ்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கில்கிறிஸ்ட் விக்கெட்-கீப்பராக 9410 ரன் அடித்திருந்ததை, முந்தினார் எம்.ஸ். தோனி.
இந்த பட்டியலில் குமார் சங்ககராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா விக்கெட்-கீப்பராக 13341 ரன் அடித்திருக்கிறார். அடுத்த படியாக தோனி 9438 ரன்னில் இருக்கிறார். இதுவே போதும், இந்தியாவிற்கு தோனி எப்படியாப்பட்ட பேட்ஸ்மேன் என்று தெரிந்துகொள்ள.
எழுத்தாளரின் கருத்து:
மகேந்திர சிங் தோனி பார்மில் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் யாரும் அடிக்காத போதுதான், மகேந்திர சிங் தோனி பொங்கி எழுந்து, எதிரணியை ஒரு கை பார்ப்பார். அதேதான் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் நடந்தது. 2019 உலககோப்பை வரை தோனி விளையாடினால், அதுவும் இதே பார்மோடு விளையாடினால், குமார் சங்ககராவின் சாதனையை இவர் கண்டிப்பாக முறியடித்து, இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.