இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் 22ந் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி 20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் உட்பட 8 அணிகள் களமிறங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான டூடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவன் நெகி, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் தமிழக பேட்ஸ்மேன் அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த தொடக்கவிழாவின் போது எவ்வளுவு தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என போட்டி நடக்கும். இந்த போட்டியில் தோனி கலந்து கொள்ள போகிறார். மேலும், எல்.பாலாஜி, முரளி விஜய் தமிழக ஆல்-ரவுண்டர் கணபதி ஆகியோர் பங்கேற்கின்றர்.
தொடக்க விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து 7.15 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்லைப் போன்று டிஎன்பிஎல் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.