சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி
தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக, ஷர்துல் தாகூர் தென் ஆப்ரிக்கா சென்று விட்டதால், அவருக்கு பதிலாக சாகர் திரிவேதியை களமிறக்க சையத முஸ்தாக் அலி தொடருக்கான மும்பை அணி முடிவு செய்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களுக்கான வேலையை சரியாக செய்தாலும், பேட்ஸ்மேன்களின் சொதப்பல் பேட்டிங்கால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி துவங்க உள்ளது.
ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக ஷர்துல் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி அவசரமாக தென் ஆப்ரிக்கா வர வேண்டும் என்ற பி.சி.சி.ஐ., அழைப்பின் பேரில் இருவரும் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர்.

இதில் ஷர்துல் தாகூர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மற்றொரு வீரரான நவ்தீப் சைனி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த இரு அணிகளும் சூப்பர் லீக் சுற்றிற்கு தகுதி பெற்றுவிட்டதால், ஷர்துல் தாகூர் மற்றும் சைனி இல்லாதது அவர்கள் சார்ந்துள்ள அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மும்பை அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, சாகர் திரிவேதியை எஞ்சியுள்ள போட்டிகளில் களமிறக்க மும்பை அணி முடிவு செய்துள்ளது.
இதே போல் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருப்பதால், கர்நாடகா அணிக்காக விளையாடி வந்த மணிஷ் பாண்டேவையும் கர்நாடகா அணி விடுவித்துள்ளது.