முரளி விஜய்க்கு காயம் இன்னும் சரியாகாததால் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்குப் பதிலாக தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அப்போது முரளி விஜய்யின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக ஐ.பி.எல். தொடரை புறக்கணித்துவிட்டு லண்டனில் சென்று ஆபரேசன் செய்து கொண்டார். ஆபரேசன் செய்த முரளி விஜய்யின் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
இலங்கை அணிக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரது மணிக்கட்டில் வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் பிசிசிஐ மருத்துவக் குழு, அவரை முழுமையாக காயம் குணமடைவதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது.
இதனால் இலங்கை தொடரில் அவர் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்த போது டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மீண்டும் 3வது டெஸ்டில் வந்த அவர், 82 ரன் அடித்தார். 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய விஜய், முதல் இன்னிங்சில் 11 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 4 ரன் மட்டுமே அடித்து, இந்திய ரசிகர்களை ஏமாற்றினார்.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளி விஜய், 3408 ரன் அடித்தார் (சராசரி – 39.62). 9 சதம் மற்றும் 15 அரைசதம் அடித்திருக்கிறார் முரளி விஜய்.