இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை நாதன் லயன் பெற்றார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அவர் முந்தினார்.
சிட்டகாங்கில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்த போட்டி தொடரில் நாதன் லயன் 22 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் வரிசையில் இலங்கை வீரர் முரளிதரனுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வகையில் இலங்கை வீரர் ஹெராத் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியில் நாதன் லயன் 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை அள்ளினார். ஆசிய மண்ணில் ஆஸ்திரேலிய வீரரின் சிறப்பான பந்து வீச்சு இது தான்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் 29 வயதான நாதன் லயன், இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 46 விக்கெட்டுகள் (7 டெஸ்ட்) வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை நாதன் லயன் பெற்றார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா (தலா 44 விக்கெட்டுகள்) ஆகியோரை அவர் முந்தினார்.