ஷாகின் அப்ரிடியை விட பாகிஸ்தான் அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்… இப்போதைக்கு இவர் தான் நம்பர் 1 வீரர்; தினேஷ் கார்த்திக் பாராட்டு
வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவூஃபின் பங்களிப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 5ம் தேதி துவங்க உள்ளது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒரு அணியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்திருந்தாலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வலுவானது என்பதால் முன்னாள் வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட கூடாது என மற்ற அணிகளை எச்சரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஹாரிஸ் ரவூஃபை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவூஃப் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். முக்கியமாக ஹாரிஸ் ரவூஃபின் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சாதரண விசயம் கிடையாது. அவரது பந்துவீச்சு துல்லியமாக இருக்கும். பவுன்சர் பந்துகளை கூட ஹாரிஸ் ரவூஃப் சரியான திசையில் வீசுவார். பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரரான ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் சொதப்பி, விக்கெட் எடுக்க திணறிய நேரங்களில் கூட ஹாரிஸ் ரவூஃப் தனது வேலையை சரியாக செய்து இக்கட்டான சூழ்நிலைகளிலும் பாகிஸ்தான் அணிக்காக விக்கெட்டை எடுத்து கொடுத்துள்ளார். ஹாரிஸ் ரவூஃபை போன்று தற்போது மிக சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே தொடர்ச்சியாக மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஹாரிஸ் ரவூஃப் உலகக்கோப்பை தொடரில் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.