திருப்பிக்கொடுத்தது நியூசி. தர்ம அடி வாங்கியது இந்தியா

 

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாக களமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.

இருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில் புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109 ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும், தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.

அதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் வெளியேறினார். விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள் சேர்த்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாக பந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

 

Editor:

This website uses cookies.