உங்க அரசியல் எங்களை பிரித்துவிடாது… ஷாஹித் அப்ரிடி அதிரடி
இந்திய பாகிஸ்தான் இடையேயான அரசியல் பிரச்சனைகள், இந்திய கேப்டன் கோஹ்லியுடனான தனது நட்பை எப்பொழுதும் பிரிக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே, இந்திய அணிக்கு எதிரியாக பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியின் எதிரியாக இந்திய அணியும் பாவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைகளும் சமீப காலமாக அதிகரித்து வருவதால், இனி ஒரு போதும் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது என்று தற்போதைய மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டிலும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மேல் ரசிகர்கள் ஏற்கனவே கடுப்பில் இருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான அரசியல் பிரச்சனைகளால் கோஹ்லியுடனான தனது நட்பில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அப்ரிடி “இரு நாடுகள் இடையேயான அரசியல் பிரச்சனைகளுடன் எங்களது நட்பை வரையறுக்க இயலாது. கோஹ்லி மிகச்சிறந்த மனிதர். நான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு அவர் உதவி செய்ததை என்னால் மறக்க முடியாது, அவரது திருமணத்திற்கு நானும் எனது வாழ்த்தை தெரிவித்திருந்தேன். நாங்கள் இருவரும் அதிகமாக பேசியது கிடையாது, ஆனால் கோஹ்லி என்னிடம் பேசியுள்ள ஒரு சில வார்த்தைகளில் இணக்கமான உணர்வு வெளிப்படும்.
தனிப்பட்ட மனிதர்கள் இரு நாட்டின் உறவிற்கு ஒரு வடிவம் கொடுக்க முடியும் என்பதற்கு கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உதாரணமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாகிஸ்தானுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து நான் அன்பையும், மரியாதையும் பெற்றுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார் அப்ரிடி.