உம்ரான் மாலிக் பத்திரமாக பாதுகாக்கவேண்டிய பவுலர் என்று கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.
நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் மழை காரணமாக இரத்தானது.
நியூசிலாந்து தொடரில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். ஐபிஎல் போட்டிகளில் 150 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் பந்துவீசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். டி20 போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் இரண்டு விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது போட்டியில் பந்துவீச வாய்ப்புகள் அமையவில்லை. மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே இரத்தானது. மூன்றாவது போட்டியில் பந்துவீசி முக்கியமான கட்டத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இவரின் வேகப்பந்துவீச்சை இன்னும் மெருகேற்றினால், இந்திய அணியின் எதிர்காலம் அபாரமாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இவர் எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா மைதானத்தில் பந்துவீச்சில் அபார திறமையை வெளிப்படுத்தி இருப்பார் என்ற கருத்துக்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.
போதிய அனுபவம் இல்லாததால் தான் இவரை எடுக்கவில்லை என்று பிசிசிஐ வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. தற்போது நியூசிலாந்து தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். இது 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையில் பயன்படுத்துவதற்கு கொடுக்கப்படும் அனுபவம் என்று சில விமர்சனங்கள் வருகின்றன.
இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இளம் வீரர் உம்ரான் மாலிக் ஆதரவாக பேசியுள்ளார். ரவி சாஸ்திரி கூறியதாவது:
“இந்திய அணியில் உம்ரான் மாலிக் பாதுகாக்கப்பட வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளும் அமைய வேண்டும். இதுபோன்று 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய இன்னொருவர் கிடைப்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. அவர்கள் வரும்பொழுது வரட்டும் தற்போது கிடைத்துள்ள ஒருவரை நாம் நன்றாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் வாஷிங்டன் சுந்தர் நிறைய வாய்ப்புகள் கொடுப்பதற்கு தகுதியான வீரர். இத்தொடரில் தனி ஆளாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தெரிந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் செயல்படும் விதத்தை பார்க்கும் பொழுது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் இந்திய அணியில் இது இளம் வீரர்களுக்கான காலமாக தெரிகிறது. எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” என்றார்.