உத்தரபிரதேச அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி சீசனில் சொதப்பி வருகிறார். கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது நாளில் வெறும் மூன்று பந்துகள் சந்தித்து ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆனார் சுரேஷ் ரெய்னா.
ரன் அடிக்க அவர் தொடர்ந்து திணறி வருவதால், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது சுரேஷ் ரெய்னாவுக்கு கடினம் ஆகி விட்டது.
உத்தரபிரதேச அணியின் தொடக்க வீரர்கள் உமங் சர்மா மற்றும் சிவம் சவுதாரி சிறப்பாக தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்தார்கள். இதனால், அடுத்ததாக வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ஆனால், கர்நாடக அணியின் பந்துவீச்சாளர் ரோனிட் மோரே ரெய்னாவை போல்டாக்கி அவுட் ஆக்கினார், இதனால் ரன் ஏதும் எடுக்காமல் சுரேஷ் ரெய்னா நடையை கட்டினார்.
இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 99 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இந்த ஐந்தாவது போட்டியில் அவர் ஒரு ரன் கூட அடிக்க வில்லை. ரெய்னாவின் விக்கெட் அவரது அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. 186.1 ஓவர்கள் விளையாடிய கர்நாடக அணி 655 ரன் அடித்து ஆல்-அவுட் ஆனது. இதனால், அனைவரும் ரெய்னா ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்த்தார்கள்.
அடுத்த சுற்றுக்கு சுரேஷ் ரெய்னா தலைமையிலான உத்தரபிரதேசம் அணி தகுதி பெறவில்லை. இதனால், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள், இப்போது அதுவும் நடக்காது.
28 வயதான மனிஷ் பாண்டே உத்தரபிரதேச அணிக்கு எதிராக 231 அடித்திருந்தார், அதில் 29பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். தேகா நிஸ்ச்சலுடன் சேர்ந்து அந்த விக்கெட்டுக்கு 354 ரன் சேர்த்தார் மனிஷ் பாண்டே. மனிஷ் பாண்டே இரட்டை சதம் அடிக்க, அவருடன் விளையாடி கொண்டிருந்த தேகா நிஸ்சல் 195 ரன் அடித்தார். இவர்களின் உதவியால், கர்நாடக அணி 600 ரன்னை கடந்தது. இதே ரஞ்சி டிராபி சீசனில் மூன்றாவது முறையாக கர்நாடக அணி 600 ரன்னுக்கு மேல் அடிக்கிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 218 ரன் அடித்திருந்த மனிஷ் பாண்டே, அத்துடன் அதிகமாக அடித்து 238 ரன்னில் அவுட் ஆனார்.
உத்தரபிரதேச அணியின் தரப்பில் இம்தியாஸ் அஹ்மத் 6 விக்கெட்டுகள் எடுக்க, த்ருவ் பிரதாப் சிங் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். மீதம் உள்ள ஒரு விக்கெட்டை அக்சதீப் நாத் எடுத்தார்.