1.அதிவேக சதம்
இலங்கை அணி பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 35 பந்தில் சதமடித்தார். இதன்மூலம் ‘டுவென்டி-20’ அரங்கில் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை டேவிட் மில்லருடன் பகிர்ந்து கொண்டார்.
2.அதிக ரன் பார்ட்னர்ஷிப் :
இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி 165 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் டில்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
3.அதிக ரன் பார்ட்னர்ஷிப் உலக அளவில் :
* தவிர ரோகித்-ராகுல் ஜோடி, எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த சர்வதேச ஜோடிகள் வரிசையில் 4வது இடம் பிடித்தது. முதலிடத்தில் நியூசிலாந்தின் கப்டில், வில்லியம்சன் ஜோடி (171* ரன், முதல் விக்கெட், எதிர்: பாகிஸ்தான், இடம்: ஹாமில்டன், 2016) உள்ளது.
4.ஒரே டி20i இன்னிங்சில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் :
நேற்று, 43 பந்தில் 118 ரன்கள் குவித்த ரோகித், சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன், கடந்த ஆண்டு புளோரிடாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், 110* ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
5.உலக அளவில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன் அடித்த 8வது வீரர் :
* இம்மைல்கல்லை எட்டிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் 8 வது இடத்தை ஆப்கானிஸ்தானின் முகமது ஷாஜத்துடன் (118* ரன், எதிர்: ஜிம்பாப்வே, இடம்: சார்ஜா, 2016) பகிர்ந்து கொண்டுள்ளார் ரோகித். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் (156 ரன், எதிர்: இங்கிலாந்து, இடம்: சவுத்தாம்ப்டன், 2013) உள்ளார்.
6.இரண்டு முறை சதம் :
இலங்கைக்கு எதிராக 118 ரன்கள் குவித்த ரோகித் சர்மா, சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் இரண்டு முறை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். ஏற்கனவே இவர், கடந்த 2015ல் தர்மசாலாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் எடுத்திருந்தார். சமீபத்தில் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்திருந்தார்.
* இவரை தவிர, இந்தியா சார்பில் ரெய்னா (101 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2010), லோகேஷ் ராகுல் (110* ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2016) தலா ஒரு சதமடித்துள்ளனர்.
7.ஐந்தாவது வீரர் :
* சர்வதேச ‘டுவென்டி-20’ வரலாற்றில், இரண்டு முறை சதமடித்த 5வது சர்வதேச வீரரானார் ரோகித். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், லீவிஸ், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், முன்ரோ தலா 2 முறை சதமடித்திருந்தனர்.
8.இந்த வருடம் மட்டும் 64 சிக்ஸர் :
இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 10 சிக்சர் விளாசினார். இவர், இந்த ஆண்டு 31 போட்டிகளில் 64 சிக்சர் (டெஸ்டில் 3 + ஒருநாள் போட்டியில் 46 + சர்வதேச ‘டுவென்டி-20’யில் 15) அடித்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டு மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை (63 சிக்சர், 32 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித்.