வங்கதேசம் அணியுடன் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை அறிவித்திருக்கிறது இந்திய அணி.
வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தவறவிட்டது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் இந்திய அணி நான்காம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்திற்கு முன்னேறுவதற்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெல்வது மிகவும் அவசியம் என்பதால், அதிதீவிரமாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருநாள் போட்டியின் போது கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இருந்து விலகினார். தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிய வந்திருக்கிறது.
ரோகித் சர்மா-விற்கு மாற்று வீரராக இந்தியா ஏ அணியின் கேப்டனாக விளையாடி வந்த அபிமன்யு ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முகமது சமி, டெஸ்ட் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ரவீந்திர ஜடேஜா இன்னும் குணம் அடையாததால் அவரும் டெஸ்ட் தொடரில் இருக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கும் மாற்றுவீரரை அறிவித்து, முதல் டெஸ்ட் போட்டியில் இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ. இந்திய அணி மொத்தம் 3 மாற்றங்களுடன் களமிறங்குகிறது. ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்பியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், சிதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கீப்பர்), கே.எஸ்.பாரத் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது . சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.