வங்காள தேசம் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 217 ரன்னில் சுருண்டது. சாஹிப் அல்ஹசன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தனார்.
ரென்ஷா (45), லயன் (0), மேக்ஸ்வெல் (23), கம்மின்ஸ் (25), ஹசில்வுட் (5) ஆகியோரை வெளியேற்றிதன் மூலம் பந்து வீச்சு ஜாம்பவான்களுடன் சாதனையை பகிர்ந்துள்ளார் சாஹிப் அல் ஹசன்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இலங்கையின் முத்தையா முரளீதரன் மற்றும் ரங்கணா ஹெராத் ஆகியோர் அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தனர்.
சமீபத்தில்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் டெஸ்ட் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இதனால் இந்த இரண்டு அணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.