மேகாலயா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள் அடுத்த ரஞ்சி டிராபி சீசனில் இடம் பிடிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனால் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு பல்வேறு பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்திற்கு அளித்தது.
இதில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அமல்படுத்த பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிசிசிஐ அமல்படுத்த தயாராக இல்லாததால், உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை அமைத்தது.
ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்திற்கு பெரிய இழப்பு ஏற்படும். ஏனெனில், மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா, மும்பை, விதர்பா ஆகிய அணிகள் உள்ளன. இதில் இரண்டு அணிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும். குஜராத்தில் குஜராத் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய இரண்டு அணிகள் உள்ளன. இது ஒன்று செயல்பட முடியாது.
இந்த அணிகள் நீக்கப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த ரஞ்சி டிராபி சீசனில் இருந்து வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநில அணிகள் இடம்பெறும் என நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் உறுதியளித்துள்ளார்.