கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள்.
இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது. இன்றைய மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 133 ரன்களிலும் ரஹானே 132 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.
அஸ்வின் 92 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்தார்.
இதையடுத்து அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களும் 250 விக்கெட்டுகளும் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டும் எடுத்து 2000 ரன்களும் அடித்த ஆல் ரௌண்டர்கள் :
- அஸ்வின் – 51 போட்டிகள்
2. ஹேட்லி – 54 போட்டிகள்
3. இம்ரான் கான், போத்தம் – 55 போட்டிகள்
ஆட்டத்தின் விவரம் :
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கைக்கு எதிராக, காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இரண்டாவது டெஸ்டில் இலங்கையை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த டெஸ்டை போலவே டாஸ் வெற்றி பெற்றது இம்முறையும் இந்திய அணிக்கு நன்கு பலனளித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பினர். புஜாரா 133, ரஹானே 132 ஆகியோர் சதம் விளாசினர். ராகுல், சஹா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அரை சதம் கடந்தனர். இன்று தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்களை குவித்திருந்தது இந்தியா.
ரங்கனா ஹீரத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 600 ரன்களை குவித்து ஆல்அவுட்டானது குறிப்பிடத்தக்கது.