இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்கு வரை உயர்த்தப்படுவதால், ஏ கிரேடில் உள்ள வீரர்களான கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோருக்கு வருடத்துக்கு 12 கோடி வரை கிடைக்கும்.
கிரிக்கெட் வீரர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பி.சி.சி.ஐ சம்பளம் வழங்கி வருகிறது.
‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், ‘பி’ கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், ‘சி’ கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே வீரர்களின் சம்பளத்தை உயர்த்துமாறு கேப்டன் விராட் கோலி, சீனியர் வீரர் டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழு தலைவர் வினோத்ராயை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நிர்வாக குழுவும் இதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 6 மடங்கு வரை உயர்த்தப்படுகிறது. இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் 6 மடங்காக உயர்த்தப்படும் போது இனி ரூ12 கோடி வருடத்துக்கு கிடைக்கும். இந்த கிரேடில் விராட் கோலி, டோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர். இவர்கள் ரூ.2 கோடி பெற்று வந்தனர். இனி இவர்களது சம்பளம் ஆண்டுக்கு ரூ.12 கோடியாக உயர்த்தப்படுகிறது.
அதே நேரத்தில் கேப்டனுக்கு இதில் இருந்து அதிகமான ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பி’ கிரேடு ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு இனி ரூ.8 கோடியும், ‘சி’ கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
‘பி’ கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட 9 வீரர்களும், ‘சி’ கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும் உள்ளனர்.
புதிய ஊதிய ஒப்பந்தம் அறிவிக்கும் போது சில வீரர்கள் முன்னேற்றமும், சிலருக்கு பின்னடைவும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.