முன்னாள் இந்திய அணி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், தனக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பரிசாக வழங்கியதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you @sachin_rt paaji and @bmwindia .Grateful for this ! pic.twitter.com/8PQd9NxO11
— Virender Sehwag (@virendersehwag) September 26, 2017
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேவாக், தனது நீண்ட கால சக அணி வீரரும், தனது தொடக்க பார்ட்னருமான சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சச்சின் பரிசளித்த கார் பிஎம்டபிள்யூ 730 எல்டி. இதன் இந்திய விலை ரூ.1.14 கோடியாகும்.
“நன்றி சச்சின் பாஜி மற்றும் பிஎம்டபிள்யூ இந்தியா. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!” என்று தனது ட்விட்டர் கேப்ஷனில் சேவாக் குறிப்பிட்டுள்ளார். சச்சினும், சேவாக்கும் இந்திய அணியின் தலைசிறந்த தொடக்க வீரர்களாக இருந்துள்ளனர்.

குறிப்பாக, 2003-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் இந்த இணையின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. இருவருக்கும் இடையில் எப்போதும் நெருக்கமான நட்பு உள்ளது.
கிரிக்கெட்டில் இருந்து சேவாக் ஓய்வு பெறுவதாக அறிவித்த போது,
“உண்மையான சாம்பியன்” என்று சேவாக்கை சச்சின் புகழ்ந்திருந்தார். சேவாக் அடிக்கடி கூறும் ஒரு விஷயம், ‘கிரிக்கெட்டில் எனக்கு முன் மாதிரி சச்சின் தான். அவரால் தான் நான் கிரிக்கெட் விளையாட வந்தேன். களத்திற்கு வெளியே சச்சின் எனக்கு மிகச் சிறந்த நண்பர்’ என்பதே.

சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
சேவாக்கின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்பதால், கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து சேவாக் ஓரங்கட்டப்பட்டார். அதன்பின், முறையான மரியாதை இன்றி சேவாக் கிரிக்கெட் இருந்து விடைபெற்றார்.