சூர்யகுமார் யாதவ்

360 டிகிரின்னா அது அவர் மட்டும்தான், அவரைப் பார்த்து நாங்கள் விளையாடுகிறோம் அவ்வளவுதான் என்று பதில் அளித்து இருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் நான்கு வெற்றியை பெற்று 8 புள்ளிகள் உடன் குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் குரூப் 1 இல் இரண்டாவது இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணியுடன் அரை இறுதி போட்டியில் மோதுகிறது.

இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு முழு முக்கிய காரணமாக பேட்டிங்கில் இருந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் இருவரும் தான். இதில் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

சூர்யகுமார் யாதவ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனி ஆளாக நின்று 68 ரன்கள், தற்போது ஜிம்பாவே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என தொடர்ச்சியாக பல்வேறு சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் இவர் பந்துகளை அடிப்பதால் இவருக்கு இந்தியன் 360 என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இந்தியன் 360 என்று அழைக்கப்படுகிறீர்கள், அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு, “உலகில் 360 என்றால் அது டிவிலியர்ஸ் மட்டுமே. அவரைப் பார்த்து நாங்கள் விளையாடி வருகிறோம். இதில் எந்தவித மாற்று கருத்தும் என்னிடம் இல்லை.” என்றார்.

ஏபி டி வில்லியர்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேட்டி அளித்த அவர், “எனது திட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. பயிற்சியின் போது நான் என்னென்ன செய்ய பயிற்சி செய்தேனோ, அதைத்தான் போட்டிகளிலும் செய்தேன். திட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்டம் அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது செய்த பயிற்சிக்கு கிடைத்த பலனாக நினைக்கிறேன். அதுவும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறோம். அது அணிக்கு முக்கியமானதாக அமைந்தால் வேறு என்ன தேவை. அதற்காகத்தான் விளையாடுகிறோம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *