உம்ரான் மாலிக் டி20 போட்டிகளுக்கு உகந்த வீரர் அல்ல என்கிற அதிர்ச்சிகரமான கருத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர்.
இந்தியா தற்போது இலங்கை அணியுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு வேகப்பந்து வீட்டில் சிவம் மாவி மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் அசத்தினர். சிவம் மாவி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெடுகளை கைப்பற்றினார். அதேநேரம் உம்ரான் மாலிக் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கு முன்னர் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி உள்ள உம்ரான் மாலிக், இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து 12.44 ரன்கள் எக்கனாமி வைத்திருக்கிறார். இது டி20 போட்டிகளுக்கு உகந்தது அல்ல.
முதல் ஐபிஎல் சீசனில் தனது வேகத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான், இரண்டாவது ஐபிஎல் சீசனில் வேகம் மற்றும் விக்கெட்டுகள் இரண்டிலும் கலங்கினார். ஆகையால் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வங்கதேசம் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் 4 வெற்றிகளை கைப்பற்றினார்.
தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் இவரை விளையாட வைக்க வேண்டும். டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாபர். அவர் கூறியதாவது:
“வேகப்பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத காரணத்தால் உம்ரான் மாலிக்கை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் உம்ரான் மாலிக் டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார். 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு சரியான வீரராக இருப்பார்.
டி20 போட்டிகளை பொருத்தவரை, வேகத்தை விட விவேகம் முக்கியம் அந்த விதத்தில் ஹர்ஷல் பட்டேல் சரியான வீரராக இருப்பார். டெத் ஓவர்களில் அவரை நம்பி பயன்படுத்தலாம். ஒரு சில போட்டிகள் தவறினாலும் பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய பங்கேற்றியுள்ளார். அவரை உள்ளே வைப்பதும் வெளியே எடுப்பதுமாக இருக்காமல் தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்து அணியில் பயன்படுத்த வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் உம்ரான் மாலிக்கின் வேகம் நன்றாக எடுபடும். குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்பதால் அதற்காக அவரை பயன்படுத்த வேண்டும்.” என்றார்.