3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றியை, மைதானத்தில் இருந்த ஆஸி., சிறுவன் புஷ்பா படப்பாணியில் கொண்டாடிய வீடியோ இடையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமானது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டு இன்னிங்சிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். புஜாராவை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 30 ரன்களை எட்டவில்லை.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் எடுத்து, 88 எண்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், 75 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
மூன்றாம் நாளில், 76 ரன்கள் இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து ஆஸி., அணி எட்டியது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியையும் பெற்றது.
ஆஸ்திரேலியாவிற்கு சென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ், அவரது தாயாரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பவில்லை. ஆகையால் 3வது டெஸ்டிற்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.
சிறப்புமிக்க இந்த வெற்றியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கொண்டாட தவறவில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு சப்போர்ட் செய்த சிறுவன் ஒருவன், இந்தூர் மைதானத்தில் “புஷ்பா” படப் பாணியில் தனது வெற்றியை இந்திய ரசிகர்கள் சிலர் முன் கொண்டாடிய நிகழ்வின் வீடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் பக்கத்தில் வெளியான அந்த வீடியோவை கீழே காணலாம்.
Australia fan with a 'Pushpa' trademark and dialogue after the win in Indore. pic.twitter.com/zaausE4wWB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 3, 2023