வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதன் டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. 6 ஒருநாள் போட்டிக் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வென்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் டெஸ்ட் ஜோகனிஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் வென்று இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் போட்டி அனைத்து காலக்கட்டத்திலும் வீராட்கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இதேபோல ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரும் கோலியை புகழ்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கோலி முற்றிலும் மாறுபட்ட வீரர். என்ன ஒரு அற்புதமான வீரர் என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் வீராட் கோலி இதுவரை 3 சதம் அடித்துள்ளார்.

செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 153 ரன்கள் குவித்தார். டர்னலில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 112 ரன்னும், கேப்டவுனில் நடந்த ஒருநாள் போட்டியில் 160 ரன்னும் குவித்தார்.
ஒருநாள் போட்டியில் 34 சதங்களை எடுத்து உள்ளார். தெண்டுல்கரை தொட அவருக்கு 15 செஞ்சூரி இன்னும் தேவை. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் அதிக செஞ்சூரி எடுத்த சாதனை வீரராக அவர் உள்ளார்.
வீராட் கோலி கடந்த ஆண்டு 26 ஒருநாள் போட்டியில் விளையாடி 1460 ரன் எடுத்து உள்ளார். சராசரி 76.84 ஆகும். ஸ்டிரைக் ரேட் 99.11 ஆகும். 6 சதமும், 7 அரை சதமும் அடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கமே அவருக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது.