இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது வரை தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலிக்கு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விடுமுறை நாட்களில் அவருக்கு திருமணம் நடைபெறும் என்ற தகவல் கசிந்துள்ளது. கோலிக்கு தனது நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் டிசம்பர் மாதம் திருமணம் உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் கல்யாணத்திற்கான தேதி குறிக்கவில்லையாம். விரைவில் அதுவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.