பிசிசிஐ-இன் வீரர்கள் புனர்வாழ்வு மையங்கள் வேலை செய்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா.
இந்திய அணிக்கு தற்போது வேகப்பந்துவீச்சு பெருத்த குறையாக இருந்து வருகிறது. டி20 உலககோப்பைக்கு முன்பு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக விலகினார். அதன் பிறகு ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சஹார் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகும் ஓரிரு போட்டிகளிலேயே மீண்டும் காயம் அடைகின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்கு முன்பு புவனேஸ்வர் குமார் தொடர்ச்சியாக பல தொடர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆகையால் இந்த தவறு இன்று, நேற்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவேநடைபெற்று வருவதை நம்மால் கவனிக்க முடிகிறது.
பிசிசிஐ யின் மறுசீரமைப்பு மையம், வீரர்கள் புனர்வாழ்வு மையம் செயல்படவில்லையோ என்று கேள்வியை முன் வைத்திருக்கிறார் விராட் கோலி யின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா. அவர் கேள்வி எழுப்பியதாவது,
“கடந்த வருடம் இந்திய அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கே? 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியவர்கள் தற்போது எங்கே போனார்கள்? அவர்களை ஏன் இந்திய அணி தக்கவைத்து, பாதுகாக்கவில்லை? அவர்களை சரியாக மேலாண்மை செய்யவில்லையா? ஏன் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள்? அவர்களுக்கு அடிக்கடி காயம் எப்படி ஏற்படுகிறது? அணியில் இத்தனை மருத்துவ குழுவினர் இருந்தும் ஏன் ஒரே மாதிரியான தவறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது? இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஏன் புதிய வேகப்பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு வருடமும் தேடி வருகிறோம்? பிசிசிஐ தலைமை நிர்வாகத்தால் இதை கண்டறிய முடியவில்லையா? என்று பல கேள்விகளை அடுக்கி உள்ளார்.