ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலிக்கு கேப்டனாக இருக்கும் அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் டு பிளஸ்ஸில்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி எத்தகைய ஆளுமை படைத்தவர் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எவ்வளவு முனைப்புடன் அணியின் வெற்றிக்காக பாடுபடுவார் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
‘சேஸ் மாஸ்டர்’, ‘ரன் மெஷின்’ போன்ற செல்லப் பெயருக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு சறுக்கல்களை சர்வதேச போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் சந்தித்து வருகிறார்.
சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காததால் பல விமர்சனத்திற்கு உள்ளாகினார். ஆசிய கோப்பைக்குப்பின், அதை அப்படியே மாற்றி அமைத்து தற்போது மிகச்சிறந்த பார்மிற்கு திரும்பி இருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவருக்கு இருக்கும் அவப்பெயர் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆர்சிபி அணிக்கு இத்தனை வருடங்களாக கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஒருமுறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கோப்பையை வெற்றி பெறும் அளவிற்கு வழி நடத்தவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்த அழுத்தத்தால் கடந்த வருடம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். சக வீரராக விளையாடினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஏலத்தில் எடுக்கப்பட்ட டூ ப்ளஸ்ஸிஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அவரை அழகாக வரவேற்றார் விராட் கோலி.
இந்நிலையில் விராட் கோலி போன்ற வீரர் இடம் பெற்றிருக்கும் அணியை கேப்டன் பொறுப்பேற்று வழி நடத்துவது எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் டு ப்ளஸ்ஸிஸ். அவர் கூறுகையில்,
“என்னை விட சிறந்த ஆளுமை படைத்தவர் விராட் கோலி. ஆகையால் அவருக்கு நிகராக அல்லது அவரை மிஞ்ச வேண்டும் என நான் நினைத்ததில்லை.
அணியில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் ஈகோ இருந்தால் அது எப்படி முடியும் என்பதை நான் நன்கு உணர்கிறேன். ஆகையால் அவருடன் நல்ல உறவை மேம்படுத்துவதற்கு பாடுபட்டு வருகிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.
இருவரும் ஒன்றாகத்தான் பயணித்து வருகிறோம். யார் பெரியவர்? யார் சிறியவர்? என்று போட்டி கிடையாது.” என்றார்.
மேலும், “அவருக்கு எதிராக பல வருடங்கள் நான் விளையாடியுள்ளேன். விராட் கோலி எத்தகைய போராட்ட குணம் படைத்தவர் என்பதை கிரிக்கெட் உலகம் நன்கு அறியும். அவரது ஆற்றலுக்கு நிகர் எதுவுமே இல்லை.
ஒவ்வொரு விக்கெட் விழும் பொழுதும் எப்படி மகிழ்ச்சியுடன் அவர் கொண்டாடுவார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். கடைசி வீரருக்கும் அவர் மரியாதை கொடுப்பார். இதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் ஒரு சூப்பர் மேன்.” என்றார்.