டைம்ஸ் நாளிதழின் “செல்வாக்குள்ள 100 நபர்களின்” பட்டியலில் இடம்பிடித்தார் விராத் கோலி 1

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலிக்கு மற்றுமொரு சிறப்பு கிடைத்துள்ளது. அவர் டைம்ஸ் நாளிதழின் 2018க்கான செல்வாக்கு உள்ள 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 29 வயதுடைய விராத் கோலி இந்த பட்டியில் இடம்பெற்றுள்ள 6 விளையாட்டு வீரர்களில் ஒருவராவார்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், கெவின் துரான்ட் (கூடைப்பந்தாட்டம்), சோலோ கிம் (ஸ்னோபோர்டிங்), ஆடம் ரிபான் (ஃபிகர் ஸ்கேட்டிங்) மற்றும் ஜே.ஜே. வாட் (அமெரிக்க கால்பந்து) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற 5 விளையாட்டு வீரர்கள்.

டைம்ஸ் நாளிதழின் “செல்வாக்குள்ள 100 நபர்களின்” பட்டியலில் இடம்பிடித்தார் விராத் கோலி 2

விராத் கோலி தனது நிலைத்தன்மையான ஆட்டத்தின் மூலமாக, தனது சமகால விளையாட்டு வீரர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார். தற்போது விராத் கோலி மட்டும் தான் கிரிக்கெட்டில் 3 விதமான போட்டிகளிலும் 50க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே வீரர். அவர் சர்வதேச ஒருதினப் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தையும், 2017ஆம் ஆண்டின் ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

விராத் கோலி 2017இல், கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வருடத்தில், 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர் மொத்தம் 11 சதங்களுடன் 2,818 ரன்களை குவித்தார்.  விராத் கோலி ஒட்டுமொத்தமாக இதுவரை 56 சதங்களை அடித்துள்ளார். இதில் 35 சதங்களை ஒருதினப் போட்டிகளில் அடித்து, அதில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஒரு கேப்டனாக விராத் கோலியின் செயல்பாடும் மிகச் சிறப்பானதாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இவரது தலைமையில் வென்றுள்ளது. மேலும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இருமுறை வென்றுள்ளது.

டைம்ஸ் நாளிதழின் “செல்வாக்குள்ள 100 நபர்களின்” பட்டியலில் இடம்பிடித்தார் விராத் கோலி 3

இந்திய அணி விராத் கோலி தலைமையில் சாம்பியன்ஸ் டிராப்பி போட்டியில் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. மேலும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருதின தொடரையும் வென்றது.

விராத் கோலியின் இந்த வருட துவக்கமும் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில், 3 விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 871 ரன்களை குவித்தார். இதுதான் அயல்நாட்டு தொடரில் இந்திய கேப்டன் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும்.

விராத் கோலியை, சச்சின் டெண்டுல்கர் டைம்ஸ் நாளிதழில் பாராட்டியுள்ளார். அதில் அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இந்திய அணிக்கு சிறந்த வீரர் உருவாகியுள்ளார் என்பதை அறிந்திருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “2008ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் அதில்தான் இந்திய அணிக்காக விளையாடக் கூடிய இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்”.

டைம்ஸ் நாளிதழின் “செல்வாக்குள்ள 100 நபர்களின்” பட்டியலில் இடம்பிடித்தார் விராத் கோலி 4

“அதில்தான் நான் முதன்முதலில், இந்திய அணியை வழிநடத்திய, இளமையும் திறமையும் வாய்ந்த இந்த வீரரை பார்த்தேன். இன்று விராத் கோலி, கிரிக்கெட்டின் சாம்பியன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார். இன்றும் அவர் நிலைத்தன்மையுடன் ரன்களை எடுக்கிறார். அதுதான் அவர் ஆட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.”

“ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் சிறப்பான காலம் இருப்பதுபோல், கசப்பான காலமும் இருக்கிறது. விராத் கோலிக்கு 2016இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடர் கசப்பானதாக அமைந்தது. அதன் பிறகு ஒரு குறிக்கோளுடன் செயல்பட்ட அவர், தனது பேட்டிங் நுட்பத்தை மாற்றினார். அது மட்டுமின்றி தனது உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளித்தார். இதிலிருந்து அவர் பின் வாங்கவே இல்லை.” என்று குறிப்பிட்டார் சச்சின்.

இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கு முன்பு 2014இல் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான சுற்றுப்பயணம் விராத் கோலிக்கு சிறப்பானதாக அமையவில்லை.

இந்திய அணி அந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது. கோலியின் செயல்பாடு மிக மோசமான ஒன்றாக அமைந்தது. அவர் 10 இன்னிங்க்ஸில் 13.40 என்ற சராசரியை பெற்றார். அந்த தொடரில் அவரின் அதிகபட்ச ரன் 39ஆக உள்ளது. இதனை மாற்றியமைக்க அவர் முயல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *