வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றாலும், அவர்களை ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் வீரர் மதன் லால்.
இந்திய அணியில் தற்போது நிலவி வரும் பெரிய சிக்கல் என்னவென்றால் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு அணியை விட்டு வெளியேறி வருகின்றனர். முன்னதாக பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் டி20 உலககோப்பையில் விளையாட முடியாமல் தவித்து வந்தார். அவர் ஆசியகோப்பையையும் இதன் காரணமாகத்தான் விளையாட முடியாமல் வெளியில் இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தினால் தற்போது வரை விளையாட முடியாமல் இருக்கிறார். வங்கதேச தொடருக்கு முன்பு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி காயம் ஏற்பட்டு தொடரை விட்டு விலகினார். அவரால் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது.
இப்படி முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு வருவதற்கு என்ன காரணம்? ரோகித் சர்மா அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்? விரர்கள் முழுமையாக உடல்தகுதியுடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை பார்க்காமல் எதன் அடிப்படையில் பிளேயிங் லெவனில் எடுத்து, உடனடியாக அவர்கள் காயம் அடைவதற்கு காரணகர்த்தாவாக இருந்து வருகிறார்? என்று சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறார் முன்னாள் வீரர் மதன் லால். அவர் பேசியதாவது:
“இது ரொம்பவும் வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது. வீரர்கள் உடல் தகுதியில் இல்லாமல் பிளேயிங் லெவனில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு முழு காரணம் ரோகித் சர்மா மட்டுமே. பயிற்சியாளர்கள் இதற்கு பொறுப்பேற்பார்களா?. பெருமளவில் கேப்டன் வலியுறுத்தலின்படி தான் பயிற்சியாளர்கள் நடந்து கொள்வார்கள். அணியில் ரோகித் சர்மா என்ன செய்து கொண்டிருக்கிறார்? சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறோம் என்று அவருக்கு நினைவில் இருக்கிறதா? தொடர்ச்சியாக இப்படி வீரர்கள் முழு உடல்தகுதியில் இல்லாமல் பிளேயிங் லெவனில் விளையாடும் பொழுது, அடுத்த போட்டியில் அவர்களால் விளையாட முடியாமல் மொத்தமாக தொடரை விட்டு வெளியேறி வருவதை நாம் முதல் முறையாக பார்க்கவில்லை. இதற்கு முன்னரும் பலமுறை பார்த்திருக்கிறோம்.
ஒருவேளை வீரர்களுக்கு ஓய்வு வேண்டுமென்றால், ஐபிஎல் போட்டிகளின் போது அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். எதற்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறோம். சர்வதேச போட்டிகளில் இடம்பெறுவதற்கு அது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருக்கும் வீரர்கள் முழு உடல் தகுதியில் இல்லை. அவர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால், அது எந்த வகையில் சரியாக இருக்கும்?.
முன்னணி வீரர்கள் இல்லாமல் போவதால், இந்திய அணியால் ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இவ்வளவு அலட்சியப் போக்கை ரோகித் சர்மா கையாளுவது தவறு.” என்று சாடினார்.