Cricket, Tamil Nadu, India, Women Umpires

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் லீக் போட்டியில் முதல் முறையாக நடுவர்களாக 2 பெண்கள் இணைந்து பணியாற்றி அசத்தினர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டிக்கான லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், என்.சி.சி. மற்றும் சவுந்தர் சி.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிரிக்கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு என்.ஜனனி மற்றும் ஏ.ஆர்த்தி ஆகிய 2 பெண்கள் நடுவர்களாக களம் இறங்கி திறம்பட செயல்பட்டு அசத்தினார்கள்.

இதனை பார்த்து கிரிக்கெட் வீரர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் லீக் போட்டிகளில் நடுவர்களாக 2 பெண்கள் இணைந்து களம் இறங்கியது இதுவே முதல் முறையாகும். வீரர்கள் நாலா புறமும் சிதறவிட்ட பவுண்டரி, சிக்சர் மட்டுமின்றி, பந்துவீச்சின்போது சரிந்த விக்கெட்டுகளுக்கும் சளைக்காமல் கைகளை அசைத்து காண்பித்து என்.ஜனனி மற்றும் ஏ.ஆர்த்தி ஆகியோர் நடுவர் பணியை மிகவும் நேர்த்தியாக செய்தனர்.

என்.ஜனனி சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். ஏ.ஆர்த்தி டாக்டராக இருக்கிறார். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியில் நடுவருக்கான தேர்வு எழுதினர். இதில் என்.ஜனனி தேர்ச்சி அடைந்தார். ஏ.ஆர்த்தி தேர்ச்சி அடையவில்லை. மீண்டும் விடா முயற்சியுடன் தேர்வு எழுதி நடப்பாண்டு ஆர்த்தி தேர்ச்சி பெற்றார். ஜனனி ஏற்கனவே நடுவராக பணியாற்றியுள்ளார். ஆர்த்தி நடுவராக பணியாற்றிய முதல் போட்டி இதுதான்.

இதுகுறித்து என்.ஜனனி கருத்து தெரிவிக்கையில், ‘நானும், ஆர்த்தியும் இணைந்து கிரிக்கெட் போட்டியின் நடுவராக பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மறக்கமுடியாத, நம்பமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது. சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பேன். கிரிக்கெட் போட்டியை மிகவும் நெருங்கி சென்று பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடுவராக ஆகிவிட்டால், நெருங்கி சென்று பார்க்கலாம் என்று நண்பர் ஒருவர் தெரிவித்ததன், அடிப்படையில் நடுவர் பணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். சர்வதேச போட்டியிலும் நடுவராக பணியாற்றவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை’ என்றார்.

இது தொடர்பாக ஏ.ஆர்த்தி அளித்த பேட்டியில், ‘2007-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இருந்து நான் கிரிக்கெட்டை ரசித்து வருகிறேன். கல்லூரியில் படிக்கையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கிரிக்கெட் போட்டியை பார்ப்பேன். கிரிக்கெட் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்ததில் இருந்து, விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனாலும் என்னுடைய தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ரோஷன் என்பவர் கிரிக்கெட் போட்டிக்கான நடுவர் ஆகலாம் என்று அறிவுரை கூறினார்.அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியில் நடுவருக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். சர்வதேச போட்டிக்கும் நடுவராக பணியாற்றவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் நடுவராக பணியில் சேருவதற்கு என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்தனர். நாங்கள் 2 பேரும் சேர்ந்து அன்றைய தினம் நடுவர் பணியாற்றியது திரில்லிங்கான அனுபவமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *