கிரிக்கெட் ஆலோசனைக்குழு ஜாகீர் கான், டிராவிட் பெயரை கூறியிருப்பது பரிந்துரை மட்டும்தான். இன்னும் நியமிக்கப்படவில்லை என்று நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
கதை :
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
ஆனால், கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறினார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் லட்சுமண் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு ஆராய்ந்து ரவி சாஸ்திரி, சேவாக், ராஜ்புட், டாம் மூடி உள்பட ஐந்து பேரிடம் நேர்காணல் நடத்தியது.
இறுதியாக ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு தெரிவித்தது. இதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
ரவி சாஸ்திரிக்கு துணை பயிற்சியாளர் என்ற வகையில் ஜாகீர் கான் பந்து வீச்சு ஆலோசகராகவும், டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் நியமிக்கப்படலாம் என்று சிஏசி பரிந்துரை செய்தது. இதை பிசிசிஐ தெரிவித்தது.
டிராவிட், ஜாகீர் கானை நியமனம் செய்ததில் ரவி சாஸ்திரிக்கு உடன்பாடு இல்லை. அவர் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் சிஏசி இதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது. இது கங்குலி தலைமையிலான சிஏசி குழுவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வினோத் ராய் தலைமயிலான குழுவிற்கு கடிதமும் எழுதியது. ஆனால், கங்குலி தலைமையிலான குழுவால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அதற்கு நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். தற்போது வரை ஜாகீர் கான் மற்றும் டிராவிட்டை ஆலோசகராக பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் நியமனம் செய்யவில்லை.
ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை செய்த பின்னர்தான், துணை பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஜாகீன் கான், டிராவிட் நியமனத்தில் குழப்பம் நிலவி வருகிறது.
ஒருவேளை ஜாகீர் கான், டிராவிட் பரிந்துரை நிராகரிக்கப்பட்டால் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு மிகுந்த அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது.