இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வெற்றி இலக்கை ஜிம்பாவே அணி வெற்றிகரமாக விரட்டி, இலங்கை மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டி வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
காலேயில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதோடு, இலங்கையில் அதிகபட்ச இலக்கை விரட்டிய சாதனையையும் படைத்தது. அதாவது இலங்கையில் நடைபெற்ற 296 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இலக்கு விரட்டப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
இந்தச் சாதனையை நிகழ்த்தக் காரணமாக இருந்தவர் ஜிம்பாப்வே அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய சாலமன் ஃபராய் மைர் என்ற வலது கை தொடக்க வீரரே. இவர் 85 பந்துகளில் சதம் கண்டதோடு 96 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அதில் 14 பவுண்டரிகளை விளாசினார். சான் வில்லியம்ஸ் 69 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுக்க சிகந்தர் ரசா 56 பந்துகளில் 7 பவுண்டரிக்ள் 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். வாலர் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிகந்தர் ரஸா இலங்கை இடதுகை ஸ்பின்னர் அபோன்சோவை லாங் ஆனில் சிக்ஸ் அடித்து சாதனையை வெற்றியை நிறைவு செய்தார். இதன் மூலம் இலங்கை அணியை இலங்கையில் முதல் முறையாக ஜிம்பாப்வே வீழ்த்தியது, முதல் வெற்றியே இலங்கையில் எந்த அணியும் செய்யாத சாதனையாக அமைந்துள்ளது.
இலங்கை அணியில் மலிங்கா இருந்தும் ஒன்றும் பயனில்லை அவர் 9 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார், இலங்கை பவுலிங்கில் எந்த வித தாக்கமும் இல்லை, பீல்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பல் நிலவியது. மலிங்க உடல் தகுதி குறித்த விளையாட்டுத் துறை அமைச்சரின் கருத்து சரியாகிப் போனது. தொடக்கத்தில் தேர்ட் மேனில் குனிய முடியாமல் ஒரு பவுண்டரியை விட்டார். கேட்ச் ஒன்றையும் பிற்பாடு விட்டார். சதநாயகன் மைரின் முதல் பவுண்டரியாகும் இது. மைருக்கு விக்கெட் கீப்பர் டிக்வெல்லா கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். மீண்டும் இவர் 94 ரன்களில் இருந்தபோது கேட்ச் தரையில் விடப்பட்டது, இம்முறை எளிதான வாய்ப்பை விட்டது மலிங்காவைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்? 13 ரன்களில் வில்லியம்சுக்கு தனுஷ்கா குணதிலகா கேட்சை விட்டார். இந்தக் கேட்ச்களைப் பிடித்திருந்தால் வில்லியம்ஸ், மைர் கூட்டணி 37 ரன்களையே சேர்த்திருக்கும் மாறாக 161 ரன்களை 22 ஓவர்களில் இருவரும் சேர்த்தனர். இதுதான் இலங்கையின் வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
சதநாயகன் மைருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள், புல்டாஸ்கள், லெக் திசையில் இலவச பவுண்டரி பந்துகளை இலங்கை அணி வீசியது. ஆனால் இவர் ஆட்டத்தில் குறை காண்பதற்கில்லை, ஜிம்பாப்வேவுக்கு அருமையான ஒரு தொடக்க வீரர் / ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.
முன்னதாக இலங்கை அணியில் டிக்வெல்லா 10 ரன்களில் வெளியேற குணதிலகா 60 ரன்களையும், மெண்டிஸ் 86 ரன்களையும் சேர்க்க, உப்புல் தரங்கா 79 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மேத்யூஸ் விக்கெட்டை சதநாயகனும், வேகப்பந்து வீச்சாளருமான மைர் பவுல்டு முறையில் வீழ்த்தினார் மேத்யூஸ் 30 பந்துகளில் 6 பவுண்டரிக்ள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்தார். குணரத்னே 28 ரன்கள் எடுத்தார், இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக அறிமுக சதநாயக/ ஆல்ரவுண்டர் மைர் தேர்வு செய்யப்பட்டார்.