டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 9 தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு, தென்ஆப்பிரிக்காவில்தான் ரியல் டெஸ்ட் காத்திருக்கிறது என்று ஸ்மித் கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தொடர்ந்து 9 தொடர்களை வென்று ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடர்ந்து 10 தொடர்களை கைப்பற்றி உலக சாதனைப்படைக்கும். ஆனால் இது எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் இந்தியா இதுவரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்றது கிடையாது.

அதேவேளையில் தற்போதைய இந்திய அணி முன்னர் இருந்த இந்திய அணி மாதிரி அல்ல. பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பான நிலையில் உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் தென்ஆப்பிரிக்கா தொடரில் துருப்புச்சீட்டாக இருப்பார்கள் என்பதால் இந்தியா அதிக நம்பிக்கையில் உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி ‘அன்ட்கோ’விற்கு தென்ஆப்பிரிக்காவில்தான் உண்மையான டெஸ்ட் காத்திருக்கிறது என்று முன்னாள் தென்ஆப்பிரிக்காவின் தலைசிறந்த கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு மற்றும் சொந்த மண்ணில் உள்ள திறமை, இந்திய அணிக்கு ரியல் டெஸ்ட் ஆக இருக்கும். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினால்தான் தென்ஆப்பிரிக்கா மண்ணில் வெற்றி பெற முடியும்’’ என்றார்.

அதேவேளையில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட், முதன்முறையாக இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.