ஸ்லெட்ஜிங் குறித்து எப்போதும் ஆஸ்திரேலிய அணி குறிவைக்கப்படுவதற்கு எதிராக, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மோசமாக ஸ்லெட்ஜ் செய்யக் கூடியவர் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
சனிக்கிழமை (2-12-17) அடிலெய்டில் 2-வது டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுவதைத் தொடர்ந்து ஸ்மித் செய்தியாளர்களை இன்று அடிலெய்டில் சந்தித்தார்.

ஜானி பேர்ஸ்டோ தன்னை தலையால் முட்டியது பற்றி ஆஸி. தொடக்க வீரர் பேங்க்ராப்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூற, ஸ்மித் அருகில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டேயிருந்தார், இதனை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடுமையாக விமர்சனம் செய்தார், ஆனால் ஸ்மித், தான் பேங்க்ராப்ட் சொன்னதற்குத்தான் சிரித்தேனே தவிர இங்கிலாந்து வீரரின் செயலை நினைத்து சிரிக்கவில்லை என்றார்.
இந்நிலையில் களத்தில் ஆஸ்திரேலியர்களின் ‘கோணங்கித் தனங்களை’ ஆண்டர்சன் பத்தி ஒன்றில் விமர்சித்திருந்தார்.

இது குறித்து ஸ்மித் கூறும்போது, “நானும் அந்தக் கட்டுரையை வாசித்தேன். இதனை ஜிம்மி ஆண்டர்சன் கூறுவதுதான் வேடிக்கை. எங்களை பெரிய வசைபாடிகள் என்று அவர் கூறியிருப்பது வேடிக்கைதான்.

உள்ளபடியே, நேர்மையாகக் கூற வேண்டுமெனில் கிரிக்கெட்டின் மிக மோசமான ஸ்லெட்ஜர் ஆண்டர்சன் தான். 2010-ல் அவர் என்னையே ஸ்லெட்ஜிங் செய்தார், இந்நிலையில் அவர் ஸ்லெட்ஜிங் பற்றி பேசுவது சுவாரசியமாக உள்ளது” என்றார்.

ஆண்டர்சன் தன் பத்தியில், ஆஸி. அணியினர் ஆதிக்கம் செலுத்த முடியாத போது கமுக்கமாக இருப்பார்கள், இதுதான் பிரிஸ்பனில் முதல் 3 நாட்களில் நடந்தது, திடீரென 4-ம் நாள் அவர்கள் பக்கம் ஆட்டம் செல்லும்போது ஆரம்பித்து விட்டனர், தங்கள் கோணங்கித் தனங்களை என்று கூறியிருந்தார்.