பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக டெல்லி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. அத்துடன் பார்டர் கவாஸ்கர் டிராபியை நான்காவது முறையாக தக்கவைக்கிறது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கத் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 20 மற்றும் 17, 1 ரன்கள் முறையே 3 இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் கேஎல் ராகுல் கடைசி 2 டெஸ்டில் வெளியேற்றப்பட்டு ரஞ்சிக்கோப்பையில் நன்றாக விளையாடி வரும் சர்பராஸ் கான் உள்ளே எடுத்து வரப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வெற்றி பெற்ற அணியை மாற்ற வேண்டாம் என்கிற நோக்கில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி
ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கத்.