கடைசி பந்து வரை பரபரப்பு… வங்கதேசத்திற்கு மரண பயத்தை காட்டிய ஜிம்பாப்வே வீரர்கள்; தப்பித்தது வங்கதேசம்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 28வது போட்டியில் வங்கதேச அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.
பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாண்டா 70 ரன்களும், அஃபிப் ஹூசைன் 29 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக நகர்வா மற்றும் முஜாராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன்பின் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சியன் வில்லியம்சின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஜிம்பாப்வே அணி வந்தது. 19வது ஓவரில் சியன் வில்லியம்ஸ் (64 ரன்கள்) தேவை இல்லாமல் ரன் அவுட்டானார். இதனால் கடைசி ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஜிம்பாப்வே அணிக்கு ஏற்பட்டது.
கடைசி ஓவரில் நம்பிக்கையுடன் விளையாடிய ஜிம்பாப்வே வீரர்கள் அந்த ஓவரில் 12 ரன்கள் எடுத்தாலும், அந்த ஓவரில் தேவையற்ற வகையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஜிம்பாப்வே அணி வெறும் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளது.
வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அஹமத் தஸ்கின் அஹமத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மொசதாக் ஹூசைன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.