காயமடைந்த வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தும் சொதப்புகிறார்கள். ஆகையால் புதிய ரூல் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் முன்னாள் வீரர் சபா கரிம்.
காயமடைந்து வெளியேறும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள், அதிலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடித்தாலும், மிகவும் சொதப்புகிறார்கள். பழைய பார்மிற்கு திரும்ப நிறைய போட்டிகள் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் இந்திய அணி பாதிப்பிற்கு உள்ளாகிறது.
முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்குள் வந்த பும்ரா, மீண்டும் காயம் ஏற்பட்டு வெளியேறினார். காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்குள் திரும்பிய கே எல் ராகுல் மீண்டும் தனது பழைய பார்மை கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். இது இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய பின்னடைவை டி20 உலககோப்பையில் கொடுத்தது.
அதேபோல் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்த தீபக் சகர், வங்கதேசம் ஒருநாள் தொடரின்போது காயம் ஏற்பட்டு வெளியேறியுள்ளார். அவருடன் சேர்ந்து இளம் வீரர் குல்தீப் சென், டி20 உலககோப்பைக்கு பின் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்த கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார்.
இப்படி முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறுவதை தடுப்பதற்கு புதிய ரூல் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் வீரர் சபா கரிம். அவர் பேசியதாவது,
“பும்ராவை எடுத்துக் கொண்டால், காயம் காரணமாக வெளியில் இருந்தார். பிறகு மீண்டும் அணிக்குள் வந்தார். ஒன்று இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிவிட்டு மீண்டும் காயமடைந்து வெளியேறிவிட்டார். இப்படி அனுபவமிக்க வீரர் முழுமையாக குணமடைவதற்குள் எதற்காக அணியில் அவசரமாக எடுக்கப்பட்டார்.
அதேபோல் தீபக் சஹர், ஜடேஜா போன்றோர் சர்வதேச போட்டிகளில் காயமடைந்து, அதிலிருந்து குணம் அடைந்து உள்ளே வந்தாலும் உடனடியாக காயம் அடைவது வாடிக்கையாக மாறி வருகிறது. இது தடுப்பதற்கு பிசிசியை புதிய ரூல் கொண்டு வர வேண்டும்.
அதாவது, இந்திய தேசிய அகடமியில் முழு உடல் தகுதி நிரூபிக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த வீரர் சில போட்டிகள் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் தன்னை நிரூபித்த பிறகு மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற ஒரு விதி இருந்தால் மட்டுமே தொடர்ச்சியான காயங்களில் இருந்து இந்திய அணி தப்பிக்க முடியும். அவர்கள் முழு குணமடைந்த பின் சர்வதேச போட்டிகளுக்குள் வருவார்கள்.” என்றார்.