சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் பாகிஸ்தான் – இலங்கை போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா, வங்கதேசம் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. மேலும் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட, நியூசிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது வங்காள தேசம். இதையடுத்து 3 புள்ளிகள் பெற்றிருந்த வங்கதேசம் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகிய, இரு அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் அரை இறுதிக்குள் இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
இந்நிலையில் இன்று கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது. பாகிஸ்தான், இலங்கை மோதும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு முன்னேறும். இதையடுத்து 13-ம் தேதி ஓய்வு நாளாகும். 14-ம் தேதி தேதி கார்டிப் நகரில் முதல் அரை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அல்லது இலங்கை அணிகளில் ஒன்று மோதவுள்ளது.
15-ம் தேதி பர்மிங்காமில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டம் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (19-ம் தேதி) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.