செப்டம்பர் 9ஆம் தேதி இங்கிலாந்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீசுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மழையுடன் தொடங்கியது.
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. எவின் லெவிஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாட தொடங்கினார்கள். இதனால் ஸ்கோர் மளமளவென ஏறியது. ஆனால், அது அதிக நேரம் நிலைக்கவில்லை. தொடக்கவீரர்கள் இருவரும் அவுட் ஆனதற்கு பிறகு அணியின் ஸ்கோர் குறைந்தது.
ஆனால் அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் உதவியால் 200 ரன்னை தாண்டியது வெஸ்ட் இண்டீஸ். அதனை துரத்திய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே ஹேல்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால், ஜானி பேர்ஸ்டோ சதம் அடித்து அசத்தினார்.
இந்த தோல்வியால் 2019 உலகக்கோப்பைக்கு நேரடி தகுதி வாய்ப்பை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 78 புள்ளிகளுடன் இருக்க, 86 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றது.
செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நேரடி தகுதிக்கு கடை மூடுகிறார்கள். ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெறும் என ஐசிசி தெரிவித்தது. இதனால், மற்ற அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று தான் வரவேண்டும்.
மீதம் உள்ள நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தினாலும், தரவரிசையில் இலங்கைக்கு மேல் வரமுடியாது. இதனால், தகுதிச்சுற்று போட்டி விளையாடிய ஆகவேண்டும். ஒருகாலத்தில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்று இப்படி பட்ட நிலைமை.