அணித்தேர்வு போன்ற உணர்ச்சிகரக் காலக்கட்டங்களில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவண் ஆகியோருடனான நட்பு தனக்கு உதவியதாக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தெரிவித்தார்.
“நாங்கள் மூவரும் (தவண், ராகுல், விஜய்) களத்துக்கு வெளியேயும் சிறந்த நண்பர்கள். இதனால் அணித்தேர்வு சமயத்தில் இந்த நட்பு உதவியது. ரெகுலராக தொடக்கத்தில் களமிறங்கும் ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்படும் போது அது நிச்சயம் நிலைதடுமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துகிறது. நாங்கள் மூவரும் களத்துக்கு வெளியே சிறந்த நண்பர்களாக இருப்பதால் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட எதிர்காலத்தொடரில் நிச்சயம் இந்த நட்பு உதவும்.
ஒருவருக்கொருவர் அணித்தேர்வு பற்றி மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்வது உதவுகிறது. நமக்குள்ளேயே குமைவதை விட அதை வேடிக்கையாகப் பேசி விடுவது ஆறுதல் அளிக்கிறது.

நான் என்ன உணர்ந்தாலும் ஷிகர் தவண் என்ன உணர்ந்தாலும் வெளிப்படையாக பொதுவெளியில் பேசிவிடுவோம். நாங்கள் பொதுவாக வேடிக்கை விரும்பிகள், களத்திற்கு வெளியே சில நல்ல பொழுதுகளைக் கழித்திருக்கிறோம். அது உண்மையில் அணிக்கு நல்லதாக அமைகிறது.

அயல்நாட்டில் கிரிக்கெட் தொடர்களை ஆடவிருக்கிறோம், எனவே ஒருவருக்கு தெரிந்த விஷயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது முக்கியம் என்று கருதுகிறேன்.
தென் ஆப்பிரிக்கா தொடருக்காக பள்ளி நாடகளில் செய்தது போல் டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து வருகிறேன், பவுன்ஸை எதிர்கொள்ள இது ஒரு பயிற்சி முறை. பயிற்சியில் வித்தியாசமாக எதையாவது செய்து என்னை நானே சவாலுக்கு உட்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

பெரோஷ் ஷா கோட்லா பிட்சிலும் புல் வளர்க்கப்பட்டுள்ளது, தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக இது நிச்சயம் உதவும்” இவ்வாறு கூறினார் முரளி விஜய்.