குல்தீப் யாதவ் இல்லை… எங்க தோல்விக்கு முக்கிய காரணம் இவர் மட்டும் தான்; சஞ்சு சாம்சன் வேதனை
டெல்லியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 56வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துவிட்டு, ராஜஸ்தான் அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அபிசேக் போரல் 65 ரன்களும், ஜேக்பிரேசர் 50 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் 41 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கொடுத்தாலும், பட்லர், ஜெய்ஸ்வால், ரியான் பிராக் உள்ளிட்ட ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர்.
தனி ஆளாக நீண்ட நேரம் போராடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் கடைசி மூன்று ஓவர்களை குல்தீப் யாதவ், ரசீக் சலாம் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் கச்சிதமாக வீசியோடு விக்கெட்டுகளையும் கைப்பற்றி கொடுத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.
இந்தநிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், டெல்லி அணியின் த்ரிஸ்டன் ஸ்டப்ஸின் சிறப்பான பேட்டிங்கே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது, ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் இலகுவாக எட்ட முடியும் என்றே நினைத்தோம், ஆனால் ஐபிஎல் போன்ற தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாகவே செயல்பட்டோம். பந்துவீச்சில் 10 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம், கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம். டெல்லி அணியின் துவக்க வீரரான பிரேசர் தனது வேலையை சரியாக செய்து கொடுத்தார், பிரேசரின் அதிரடி ஆட்டத்திற்கு பின்பும் சிறப்பாக பந்துவீசு போட்டியை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம், ஆனால் திரிஸ்டன் ஸ்டப்ஸின் பேட்டிங் அனைத்தையும் மாற்றிவிட்டது. ஸ்டப்ஸ் எனது அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்களான சாஹல், சந்தீப் சர்மா ஆகியோரின் பந்துகளில் கூட அசால்டாக சிக்ஸர்கள் விளாசிவிட்டார், அவர் விளையாடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் தோல்வியடைந்துள்ள மூன்று போட்டியிலுமே வெற்றிக்காக கடைசி வரை போராடி, வெற்றிக்கு மிக அருகில் வந்த தோல்வியை சந்தித்துள்ளோம். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.